பெருநாள் தொழுகை எத்தனை தக்பீர்?

Posted by Kodikkalpalayam on Tuesday, November 1, 2011 0


பெருநாள் தொழுகையில் 3+3 கூடுதல் தக்பீர்களுக்கு ஆதாரப்பூர்வமான செய்திகள் இல்லை என்பதை தெரிந்த சிலர் 7+5 தக்பீர்கள் தொடர்பான செய்திகளும் ஆதாரப்பூர்வமானது இல்லை என்று விமர்சனம் செய்யத் துவங்கியுள்ளனர். இவர்களின் விமர்சனம் சரியானதா? அவர்களின் வாதம் என்ன? அதற்குரிய பதில் என்ன என்பதை இத்தொடரில் விரிவாக அலசுவோம்.

பெருநாள் தொழுகைளில் முதல் ரக்அத்தில் கூடுதலாக ஏழு தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் கூடுதலாக ஐந்து தக்பீர்களும் நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள் என்ற செய்தி, அன்னை ஆயிஷா (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), இப்னு உமர் (ரலி), இப்னு அப் பாஸ் (ரலி), ஸஅத் பின் ஆயித் (ரலி), ஜாபிர் (ரலி), அம்ர் பின் அவ்ஃப் பின் ஸைத் (ரலி) ஆகியோர் வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நபித்தோழர் வழியாக அறிவிக்கப்பட்ட செய்தியின் தரத்தையும் ஒவ்வொன்றாகக் காண்போம்.

இப்னு உமர் (ரலி) அவர்களின் அறிவிப்பு :
பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத் தில் ஏழு தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி

நூல் : தாரகுத்னீ, பாகம் : 2, பக்கம் 48
அறிவிப்பாளர் வரிசை :

1-இப்னும் உமர் (ரலி)

2-நாபிஃவு

3-யஹ்யா பின் ஸயீத்

4-பரஜ் பின் பளாலா

5-ஸஅத் பின் அப்துல் ஹமீத்

6-அஹ்மத் பின் அலீ

7-உஸ்மான் பின் அஹ்மத்

இந்த அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் நான்காவது அறிவிப்பாளர் பரஜ் பின் பளாலா என்பவர் பலவீனமானவராவார். இவரை யஹ்யா பின் மயீன், அபூஹாத்திம், இமாம் புகாரி, முஸ்லிம், அலீ பின் அல்மதீனீ ஆகியோர் விமர்சனம் செய்துள்ளனர்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பு :
நபி (ஸல்) அவர்கள் இரண்டு பெருநாள் தொழுகையிலும் பனி ரென்டு தக்பீர்கள் கூறுவார்கள். முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறுவர்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : தப்ரானீ-கபீர், பாகம் : 10, பக்கம் : 294
அறிவிப்பாளர் வரிசை :

1-இப்னு அப்பாஸ் (ரலி)

2-ஸயீத் பின் அல்முஸய்யப்

3-ஸுஹ்ரீ

4-சுலைமான் பின் அர்கம்

5-அம்ர் பின் ஹுமைத்

6-முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான்

7-முஹம்மத் பின் அப்துல்லாஹ்.

இச்செய்தியில் இடம்பெறும் சுலைமான் பின் அர்கம் என்பவர் பலவீனமானவராவார். இவரை இமாம் புகாரி, முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத், யஹ்யா பின் மயீன், அம்ர் பின் அல்பல்லாஸ் ஆகியோர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

ஜாபிர் (ரலி) அவர்களின் அறிவிப்பு :
இரண்டு பெருநாள் தொழுகையில் ஏழு, ஐந்து தக்பீர்கள் சொல்வது நபிவழியில் உள்ளது.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : பைஹகீ, பாகம் :3, பக்கம் : 292)
அறிவிப்பாளர் வரிசை :

1-ஜாபிர் (ரலி)

2-ஷஅபீ

3-தாவூத் பின் அபீ ஹின்த்

4-அலீ பின் ஆஸிம்

5-அலீ பின் அப்பாஸ்

6-அலீ பின் அப்துல்லாஹ் பின் பள்ல்

7-அஹ்மத் பின் முஹ்ம்மத்

8-அஹ்மத் பின் இப்ராஹீம்.

இச்செய்தியில் இடம்பெறும் அலீ பின் ஆஸிம் என்பவர் பலவீனமானவராவார். இவரை இமாம் புகாரி, யஹ்யா பின் மயீன், அலீ பின் அல்மதீனீ, யஸீத் பின் ஹாரூன் ஆகியோர் குறை கூறியுள்ளனர்.

ஸஅத் பின் ஆயித் (ரலி) அவர்களின் அறிவிப்பு :
நபி (ஸல்) அவர்கள் இரண்டு பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் கிராஅத்திற்கு முன்னால் ஏழு தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் கிராஅத்திற்கு முன்னால் ஐந்து தக்பீர்களும் கூறுவார்கள்.

அறிவிப்பவர் : ஸஅத் பின் ஆயித் (ரலி)

நூல்கள் : இப்னுமாஜா (1267), தாரக்குத்னீ, பாகம் : பக்கம், ஹாகிம் 6595, பைஹகீ 5776.
அறிவிப்பாளர் வரிசை :

1-ஸஅத் பின் ஆயித் (ரலி)

2-அம்மார் பின் ஸஅத்

3-ஸஅத் பின் அம்மார்

4-அப்துர்ரஹ்மான் பின் ஸஅத்

5-ஹிஷாம் பின் அம்மார்.

இச்செய்தியில் இடம்பெறும் இரண்டாவது மூன்றாவது அறிவிப்பாளர்கள் யாரென அறியப்படாதவர்கள். இவர்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யபடவில்லை. மேலும் இதன் நான்காவது அறிவிப்பாளர் அப்துர்ரஹ்மான் பின் ஸஅத் என்பவரை யஹ்யா பின் மயீன், இமாம் புகாரி, அபூ அஹ்மத் அல்ஹாகிம் ஆகியோர் குறைகூறியுள்ளனர்.

அம்ர் பின் அவ்ஃப் பின் ஸைத் (ரலி) அவர்களின் அறிவிப்பு :
நபி (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் கிராஅத்திற்கு முன்னால் ஏழு தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் கிராஅத்திற்கு முன்னால் ஐந்து தக்பீர்களும் கூறுவார்கள்.

அறிவிப்பவர் : அம்ர் பின் அவ்ஃப் பின் ஸைத் (ரலி)

நூல் : திர்மிதீ (492). முஸ்னத் அல்பஸ்ஸார் (2871)
அறிவிப்பாளர் வரிசை :

1-அம்ர் பின் அவ்ஃப் பின் ஸைத் (ரலி)

2-அப்துல்லாஹ் பின் அம்ர்

3-கஸீர் பின் அப்துல்லாஹ்

4-அப்துல்லாஹ் பின் நாஃபிவு

5-முஸ்லிம் பின் அம்ர்.

இச்செய்தியில் இடம்பெறும் இரண்டாவது அறிவிப்பாளரின் நம்பகத்தன்மை நிரூபிக்கப்படவில்லை. இவர் யாரென அறியப்படாதவர். மேலும் மூன்றாவது அறிவிப்பாளர் கஸீர் பின் அப்துல்லாஹ் என்பவர் ஹதீஸ் கலை அறிஞர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டவர். இவரை இமாம் ஷாஃபீ, அஹமத் பின் ஹன்பல், யஹ்யா பின் மயீன்,அபூஸுர்ஆ, அபூஹாத்திம், அபூதாவூத் ஆகியோர் விமர்சனம் செய்துள்ளனர்.

ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவிப்பு :
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள், ஹஜ் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : அபூதாவூத் (970)
அறிவிப்பாளர் வரிசை :

1-ஆயிஷா (ரலி)

2-உர்வா

3-இப்னு ஷிஹாப்

4-உகைல்

5-இப்னு லஹீஆ

6-குதைபா.

மற்றொரு அறிவிப்பாளர் வரிசை :

1-ஆயிஷா(ரலி)

2-உர்வா

3-இப்னு ஷிஹாப்

4-காலித் பின் யஸீத்

5-இப்னு லஹீஆ

6-இப்னு வஹப்

7-இப்னு ஸர்ஹ்.

இந்த வரிசையின் படி இப்னு மாஜாவிலும் இடம் பெற்றுள்ளது.

மேற்கண்ட பலவீனமான ஹதீஸ்களை நாம் ஆதாரமாகக் கொள்ளவில்லை. பின் வரும் ஹதீஸை நாம் ஆதாரமாகக் கொண்டுள்ளோம். இது குறித்து சில விமர்சனங்கள் இருந்தாலும் அவை ஏற்புடையதல்ல. அது பற்றி விரிவாகப் பார்ப்போம்.

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அறிவிப்பு :
பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்கள், மற் றொரு ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூற வேண்டும். அதற்கு பிறகு கிராஅத் ஓத வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி),

நூல் : அபூதாவூத் (971)
அறிவிப்பாளர் வரிசை :

1-அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

2-ஷுஐப்

3-அம்ர் பின் ஷுஐப்

4அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் அத்தாயிஃபீ

5-முஃதமிர்

6-முஸத்தத்.

7-அன்னை ஆயிஷா (ரலி)

இச்செய்தியில் இடம் பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் அத்தாயிஃபீ என்பவரை சிலர் விமர்சனம் செய்துள்ளனர். அவற்றின் விபரங்களைப் பார்ப்போம்.

இவருடைய முழுப் பெயர் : அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் பின் யஃலா பின் கஅப் அத்தாயிஃபீ என்பதாகும்.

இவரை நம்பகமானவர் பட்டியலில் இப்னு ஹிப்பான் குறிப்பிட்டுள்ளார்கள். இப்னு மயீன் இவரை நல்லவர் என்றும் இன்னொரு இடத்தில் பலவீனமானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். நஸயீ மற்றும் அவரல்லாதவர்கள் அந்தளவுக்கு (அதாவது மிக உயர்ந்த தரத்திலுள்ள அளவிற்கு) வலிமையானவர் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வாறே அபூஹாத்திம் அவர்களும் கூறியுள்ளார்கள். அம்ர் பின் ஷுஐப் அவர்கள் வழியாக வருபவை உறுதியானவையாகும். இவருடைய ஹதீஸ்கள் பதிவு செய்து கொள்ளப்படும் என்று இப்னு அதீ குறிப்பிட்டுள்ளதாக தஹபீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல் : மீஸானுல் இஃதிதால், பாகம் : 2, பக்கம் : 452

இப்னு மயீன் இவரை நல்லவர் என்று கூறியுள்ளார் என்று இப்னு கைஸமா குறிப்பிட்டுள்ளார். இவர் அந்தளவிற்கு (உயர்தரமுள்ள நம்பக மானவர் அளவுக்கு) வலிமை வாய்ந்தவர் இல்லை. இவருடைய ஹதீஸ்கள் பதிவு செய்யப்படும் என்று நஸயீ குறிப்பிட்டுள்ளார்கள்.

இப்னு மயீன் அவர்கள் இவரை ஒரு இடத்தில் பலவீனமானவர் என்றும் இன்னொரு இடத்தில் நல்லவர் என்றும் குறிப்பிட்டுள்ளார் என்று உஸ்மான் பின் ஸயீத் குறிப்பிட்டுள்ளார். பரவாயில்லாதவர் (லா பஃஸ பிஹி) என்று இப்னு மயீன் குறிப்பிட்டதாக இப்னு மர்யம் கூறியுள்ளார்.

இமாம் புகாரி அவர்கள், இவர் விஷயத்தில் ஆட்சேபனை உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். இப்னு கல்ஃபூன் அவர்கள் இப்னுல் மதீனீ அவரை நம்பகமானவர் என்று குறிப்பிட்டதாகக் கூறியுள்ளார். இவர் அம்ர் பின்ஷுஐப் அவர்கள் வழியாக பல ஹதீஸ்களை அறிவித்துள்ளார். அது நம்பகமானதே!

ஹதீஸ்கள் பதிவு செய்து கொள்ளத் தகுதியானவரில் இவரும் ஒருவராவார் என்று இப்னு அதீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இவர் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய (நல்லவர்) என்று தாரகுத்னீ குறிப்பிட்டுள்ளார்கள். நம்பகமானவர் என்று இஜ்லீ குறிப்பிட்டுள்ளார்கள்.

(தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 5, பக்கம் : 261)

அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் அத்தாயிஃபீ என்பவரை விமர்சனம் செய்பவர்களில் ஒருவர் இப்னுமயீன் ஆவார்கள்.

இப்னு மயீன் அவர்களிடம் செவியுற்றவர்களில் ஒருவரான உஸ்மான் பின் ஸயீத் என்பவர் ஒரு முறை இவரை பலவீனமானவர் என்றும் ஒரு தடவை நல்லவர் என்றும் அவர்கள் குறிப்பிட்டதாகக் கூறியுள்ளார்.

இப்னு மயீன் அவர்களிடம் முரண்பட்ட இரண்டு செய்திகளை ஒருவரே அறிவிப்பதால் அந்த உஸ்மான் பின் ஸயீத் முரண்பட்டு அறிவித்த இரண்டையும் நாம் விட்டு விடலாம். இப்னு மயீன் என்ன கூறினார் என்று மற்றவர்கள் அறிவித்துள்ளவற்றை மட்டும் நாம் எடுத்துக் கொள்வோம்.

இப்னு அபீ ஹைஸமா என்பவர் இப்னு மயீன் அவர்களிடமிருந்து இவரை நல்லவர் என்று கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதைப் போன்று இப்னு மர்யம் என்பவர் இப்னு மயீன் அவர்களிடமிருந்து இவரை லா பஃஸ பிஹி (பரவாயில்லாதவர்) என்று குறிப்பிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இப்னு மயீன் அவர்கள் அவர்கள் லா பஃஸ பிஹி (பரவாயில்லாதவர்) என்று சொன்னால் அவர் நம்கமானவர் என்பது பொருள். இதை இப்னு மயீன் அவர்களே கூறியுள்ளார்கள்.

(நூல் : தத்ரீபுர் ராவீ பாகம் : 1, பக்கம் : 344)

எனவே அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் அத்தாயிஃபீ என்பவர் இப்னு மயீன் கருத்துப்படி நம்பகமானவர் என்று கூறலாம்.

இமாம் நஸயீ அவர்கள் இவரைப் பொதுவாக குறை சொல்லாமல் அந்தளவிற்கு (உயர் தரமுள்ள நம்பகமானவர் அளவுக்கு) வலிமை வாய்ந்தவர் இல்லை என்று கூறியிருப்பதால் அவரை முதல் தரமான நம்பகமானவர் பட்டியலில் சேர்க்க முடியாதே தவிர பலவீனமானவர் என்று கூற முடியாது என்றே முடிவு செய்ய வேண்டும்.

இமாம் புகாரி அவர்கள் இவர் விஷயத்தில் ஆட்சேபனை உள்ளது என்று கூறியிருப்பதாக ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் கூறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் இமாம் புகாரி அவர்களின் அறிவிப்பாளர் விமர்சன நூல்களான அத்தாரிகுல் கபீர், தாரீகுஸ் ஸகீர், லுஅஃபாவுஸ் ஸகீர் போன்று நூல்களில் இவ்வாறு கூறவில்லை. தனது அத்தாரீகுல் கபீர் என்ற நூலில் இவரைப் பற்றி பதிவு செய்த இமாம் புகாரி எந்த விமர்சனத்தையும் செய்யவில்லை.

ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களின் இமாம் புகாரி இவ்வாறு விமர்சனம் செய்துள்ளதாகப் பதிவு செய்த செய்தியை ஆய்வு செய்த இமாம் தஹபீ அவர்கள் இதற்கு பின்வருமாறு விளக்கம் கூறியுள்ளார்கள் :

இமாம் புகாரி அவர்கள் இவரை (அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் அத்தாயிஃபீ என்பவரை) பற்றி அத்தாரிகுல் கபீர் என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள். ஆனால் அவரைப் பற்றி எக்கருத்தையும் கூறவில்லை. மேலும் அவர்களுடைய அத்தாரிகுல் ஸகீர், அல்லுஅஃபாவு ஸகீர் ஆகிய நூல்களில் நான் இக்கருத்தைப் பார்க்கவில்லை. ஆனால் அல்லுஅஃபாவுஸ் ஸகீர் என்ற நூலில் அப்துல்லாஹ் பின் யஃலா பின் முர்ரா அல்கூஃபீ என்பவரைப் பற்றித் தான் இவர் விஷயத்தில் ஆட்சேபனை உள்ளது என்று கூறியுள்ளார்கள்.

(நூல்: மன் துகுல்லிம ஃபீஹி வஹு முவஸ்ஸகுன், பாகம் : 1, பக்கம்: 45)

நாம் தேடிய வரையிலும் இமாம் புகாரி சொன்னதாக வேறு எங்கும் காண முடியவில்லை. இமாம் புகாரி அவர்களின் அத்தாரிகுல் கபீர் என்ற நூலில் அப்துல்லாஹ் பின் அப்துர் ரஹ்மான் பின் உஸைத் என்பவரைப் பற்றி இவர் விஷயத்தில் ஆட்சேபனை உள்ளது என்று கூறியுள்ளார்கள். இவரைப் பார்த்துத் தான் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தவறுதலாக அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் பின் யஃலா அவர்களைப் பற்றியதாக எண்ணி இவ்வாறு குறிப்பிட்டிருக்க வேண்டும்.

மேலும் இவரை இமாம் புகாரி அவர்கள் நம்பகமானவராகவே எண்ணியுள்ளார்கள் என்பதற்கு சான்றுகள் உள்ளன.

(பெருநாள் தொழுகையில் 7+5 கூடுதல் தக்பீர்கள் தொடர்பாக) அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான், அம்ர் பின் ஷுஐப், தன் தந்தை, பாட்டனார் வழியாக அறிவிக்கும் ஹதீஸைப் பற்றி இமாம் புகாரியிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் இந்த செய்தியும் ஆதாரப்பூர்வமானதே! என்று கூறினார்கள் என்று இமாம் திர்மிதீ அவர்கள் கூறியுள்ளார்கள்.

(நூல் : இலலுல் கபீர், பாகம் :1, பக்கம் :190)

இமாம் திர்மிதீ அவர்கள் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் அத்தா யிஃபீ என்ற அறிவிப்பாளரைக் குறிப்பிட்டு இமாம் புகாரி இடம் கேட்ட போது இந்தச் செய்தியை ஆதாரப்பூர்வமானது என்று புஹாரி இமாம் கூறியதிலிருந்து இமாம் புகாரியின் கருத்துப்படி இவர் நம்பகமானவரே என்பதை அறியலாம்.

மேலும் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் பெருநாள் தொழுகையில் 7+5 கூடுதல் தக்பீர்கள் தொடர்பாக அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் என்பவர் அம்ர் பின் ஷுஐப் அவர்கள் வழியாக அறிவிக்கும் செய்தியை தனது புலுகுல் மராம் என்ற நூலில் பதிவு செய்த இப்னு ஹஜர் அவர்கள், இந்தச் செய்தியை புகாரி அவர்கள் ஆதாரப்பூர்வமானது என்று கூறியதாக திர்மிதீ அவர்கள் சொன்னதையும் எடுத்துரைத்துள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் அத்தாயிஃபீ என்பவரை இப்னுல் மதீனி, இப்னு மயீன், இஜ்லீ, புகாரி, இப்னு ஹிப்பான், இப்னு அதீ, தாரகுத்னீ, நஸயீ ஆகியோர் இவருடைய ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளலாம் என்றே கூறியுள்ளார்கள். மேலும் இமாம் முஸ்லிம் அவர்களும் தமது ஸஹீஹ் முஸ்லிம் என்ற நூலிலும் (4540) இவருடைய ஹதீஸ்களை பதிவு செய்திருப்பதும் இவர் பலமானவர் என்பதை உறுதி செய்கிறது.

அபூஹாத்திம் அவர்கள் மட்டுமே இவரைப் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். ஆனால் அதற்குரிய காரணத்தைக் கூறவில்லை. எனவே அதிகமானவர்கள் நம்பகமானவர்கள் என்று கூறும் கூற்றையே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதே செய்தியில் இடம் பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் அம்ர் பின் ஷுஐபைப் பற்றி சிலர் விமர்சனம் செய்துள்ளனர். அந்த விமர்சனத்தைப் பற்றி முழு விபரத்தைக் காண்போம்.

அம்ர் பின் ஷுஐப் என்பவரின் செய்திகளை ஏற்றுக் கொள்ளலாம் என்று சிலரும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று சிலரும் கூறுகின்றனர். அவர்களில் ஏற்றுக் கொள்ளலாம் என்று கூறுபவர்களின் விபரங்களை முதலில் காண்போம்.

நான் அம்ர் பின் ஷுஐப் அவர்களைப் பற்றி யஹ்யா பின் மயீன் அவர்களிடம் கேட்டேன். அவருடைய விஷயத்தில் என்ன? என்று கேட்டுவிட்டு கோபப்பட்டார்கள். அவர் விஷயத்தில் நான் என்ன சொல்வது? இவரிடமிருந்து ஹதீஸ்களை இமாம்கள் அறிவித்துள்ளார்களே (அதற்கு மேல் என்ன?) என்று குறிப்பிட்டார்கள்.

(ஆதாரம் : அல்ஜர்ஹு வத்தஃதீல், பாகம் : 6, பக்கம் : 238, தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 8, பக்கம் :43, மீஸானுல் இஃதிதால், பாகம் : 3, பக்கம் :263)

யஹ்யா பின் மயீன் அவர்கள் அம்ர் பின் ஷுஐப் அவர்களை நம்பகமானவர் என்று குறிப்பிட்டார்கள்.

(ஆதாரம் : அல்ஜர்ஹு வத்தஃதீல், பாகம் : 6, பக்கம் : 238, அல்காமில் ஃபில் லுஅஃபா, பாகம் : 5 பக்கம் : 114, தாரிக் அஸ்மாவுஸ் ஸிகாத், பாகம் :1, பக்கம் :151)

அம்ர் பின் ஷுஐப் அவர்களின் ஹதீஸ்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று யாஹ்யா பின் மயீன் குறிப்பிட்டார்கள்.

(ஆதாரம் : அல்ஜர்ஹு வத்தஃதீல், பாகம் : 6, பக்கம் : 238, மீஸானுல் இஃதிதால், பாகம் :3 பக்கம் :263)

அம்ர் பின் ஷுஐப் தன் தந்தை, பாட்டனார் வழியாக அறிவிப்பது சரியானதா? அல்லது பஹ்ஸ் பின் ஹகீம் அவர்கள் தன் தந்தை, பாட்டனார் வழியாக அறிவிப்பதைச் சிறந்ததாக கருதுகிறீர்களா? என்று என் தந்தை (அபூஹாத்திடம்) கேட்டேன். அதற்கு அம்ர் பின் ஷுஐப், தன் தந்தை, பாட்டனார் வழியாக வரும் அறிவிப்பே என்னிடம் சிறந்தது என்று கூறினார்கள்.

(ஆதாரம் : அல்ஜர்ஹு வத்தஃதீல், பாகம் : 6)

அம்ர் பின் ஷுஐப் அவர்களின் அறிவிப்பைப் பற்றி அபூஸுர்ஆ அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் : அய்யூப் ஸக்தியானீ, அபூஹாஸிம், ஸுஹ்ரீ, அல்ஹகம் பின் உத்பா போன்ற நம்பகமானவர்கள் இவரிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.

(ஆதாரம் : அல்ஜர்ஹு வத்தஃதீல், பாகம் : 6)

அமர் பின் ஷுஐப் தன் தந்தை, தம் பாட்டனார் வழியாக அறிவிப்பவை அய்யூப், நாஃபி, இப்னு உமர் (ரலி) வழியாக அறிவிப்பதைப் போன்று (சரியானதாகும்) என்று இஸ்ஹாக் பின் ராஹவைஹி குறிப்பிடுகிறார்.

(ஆதாரம் : அல்காமில் ஃபில் லுஅஃபா, பாகம் : 5 பக்கம் : 114, தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 8, பக்கம் : 43)

அம்ர் பின் ஷுஐப் அவர்களைப் போன்று குறைஷிகளில் முழுமைப் பெற்றவர்களை நான் பார்த்ததில்லை என்று அவ்ஸாயீ கூறுகிறார்.

(ஆதாரம் : அல்காமில் ஃபில் லுஅஃபா, பாகம் : 5 பக்கம் :114, மீஸானுல் இஃதிதால், பாகம் : 3 பக்கம் : 263, தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 8, பக்கம் : 43)

அம்ர் பின் ஷுஐப், தனது காலத்தில் இருந்த அறிஞர்களில் ஒருவர்.

(ஆதாரம் : மீஸானுல் இஃதிதால், பாகம் : 3 பக்கம் : 263)

அம்ர் பின் ஷுஐப் அவர்களை இப்னு மயீன், இப்னு ராஹவைஹி, ஆகியோர் நம்பகமானவர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

(ஆதாரம் : மீஸானுல் இஃதிதால், பாகம் : 3 பக்கம் : 263)

அஹ்மத் பின் ஹன்பல், அலீ பின் மதீனீ, இஸ்ஹாக் பின் ராஹ வைஹி, அபூ உபைத் ஆகியோரும் நம்முடைய பெரும்பாலான சகாக்களும் அம்ர் பின் ஷுஐப், தன் தந்தை, பாட்டனார் வழியாக அறிவித்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டுள்ளார்கள். முஸ்லிம்களில் யாரும் இவரை விட்டுவிடவில்லை.

(ஆதாரம் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 8, பக்கம் : 43)

இஜ்லீ, நஸயீ ஆகியோர் அம்ர் பின் ஷுஐபை நம்பகமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

(ஆதாரம் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 8, பக்கம் : 43)

அம்ர் பின் ஷுஐப் அவர்கள் நம்பகமானவர் என்றும் கவனிக்கப்படக் கூடிய (முக்கிய) நபர்களான அய்யூப், ஸுஹ்ரி, ஹகம் போன்ற அறிவிப்பாளர்கள் இவரிடமிருந்து அறிவித்துள்ளார்கள் என்று அபூ ஜஅஃபர் அஹ்மத் பின் ஸயீத் அத்தாரிமி குறிப்பிட்டுள்ளர்கள்.

(ஆதாரம் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 8, பக்கம் : 43)

இவரிடமிருந்து நம்பகமானவர்கள் அறிவித்தால் அது ஆதாரத்திற்கு ஏற்ற நம்பகமானதாகும் என்று யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் அவர்கள் கூறியதாக ஸதகா பின் அல்பழ்ல் கூறினார்கள்.

(ஆதாரம் : தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 8, பக்கம் : 43)

இவ்வாறு பல அறிஞர்கள் அம்ர் பின் ஷுஐப் என்ற அறிவிப்பாளரை நம்பகமானவர் என்று கூறியிருந்தாலும் சிலர் இவரை விமர்சனம் செய்துள்ளனர். அவற்றைப் பார்ப்போம்.

நான் அம்ர் பின் ஷுஐப் அவர்களிடம் சென்றால் மக்கள் (ஏதும் நினைத்து விடுவார்கள் என்ற) வெட்கத்தால் என் தலையைத் தாழ்த்திக் கொள்வேன்.

(ஆதாரம் : அல்காமில் ஃபில் லுஅஃபா, பாகம் : 5, பக்கம் : 114)

ஹதீஸ் கலை அறிஞர்கள் நாடினால் அம்ர் பின் ஷுஐப். தம் தந்தை, பாட்டனார் வழியாக அறிவித்தவையை ஆதாரமாகக் கொள்வார்கள். நாடினால் விட்டு விடுவார்கள் என்று அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

(ஆதாரம் : அல்காமில் ஃபில் லுஅஃபா, பாகம் : 5, பக்கம் :114)

இரண்டு பேரீச்சம் பழம் அல்லது இரண்டு நாணயங்கள் அளவுக்குக் கூட அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்களின் ஏடு என்னிடம் மகிழ்ச்சி அளிக்காது என்று முகீரா அவர்கள் குறிப்பிட்டார்கள்.

(ஆதாரம் : அல்காமில் ஃபில் லுஅஃபா, பாகம் : 5, பக்கம் : 114, மீஸானுல் இஃதிதால், பாகம் : 3, பக்கம் : 263)

இந்த இந்த ஹதீஸ்களைத் தவிர அம்ர் பின் ஷுஐபின் ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானது இல்லை என்று அபூ அப்துர்ரஹ்மான் அல்அத்ரமீ கூறுகிறார்கள்.

(ஆதாரம் : அல்காமில் ஃபில் லுஅஃபா, பாகம் : 5, பக்கம் : 114)

அம்ர் பின் ஷுஐப் வழியாக அறிஞர்களும் நம்பகமானவர்களும் பலவீனமானவர்களின் ஒரு கூட்டத்தினரும் அறிவித்துள்ளனர். என்றாலும் அம்ர், அவர் தம் தந்தை, பாட்டனார் வழியாக அறிவித்தவைகளை அறிஞர்கள் தவிர்ந்துள்ளார்கள். அவர் விஷயத்தில் (இரு கருத்துக்களுக்கு) இடம்பாடு இருப்பத்தினால். எனவே அவருடைய செய்திகளை ஆதாரப்பூர்மான தமது நூல்களில் இடம் பெறச் செய்யவில்லை. ஏனெனில் (இவர் அறிவிக்கும் செய்திகள் நேரடியாகக் கேட்டவை இல்லை) ஏட்டிலிருந்து அறிவித்தவையாகும் என்பதால்.

(ஆதாரம் : அல்காமில் ஃபில் லுஅஃபா, பாகம் : 5, பக்கம் : 114)

யஹ்யா பின் அல்கத்தான் அவர்கள் இவருடைய ஹதீஸ்களை விட்டு விட்டார் (நிராகரித்துள்ளார்).

(ஆதாரம் : அல்காமில் ஃபில் லுஅஃபா, பாகம் : 5, பக்கம் : 114,

மீஸானுல் இஃதிதால், பாகம் : 3, பக்கம் : 263)

அம்ர் பின் ஷுஐப் என்பவர் அந்தளவுக்கு (உயர் தரமான அறிவிப்பாளர் அளவுக்கு) வலிமை வாய்ந்தவர் இல்லை என்று யஹ்யா பின் மயீன் குறிப்பிட்டார்கள் என்ற அஹ்மத் பின் ஸுஹைர் கூறினார்கள்.

(ஆதாரம் : அல்மஜ்ரூஹீன், பாகம் : 2, பக்கம் : 71)

அம்ர் பின் ஷுஐப், தம் தந்தை, பாட்டனார் வழியாக அறிவித்தவை ஆதாரத்திற்கு ஏற்றதா? என்று அபூதாவூத் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள்: இல்லை, ஆதாரத்திற்கு ஏற்றதில் பாதியளவு கூட கிடையாது என்று பதிலளித்தார்கள்.

(ஆதாரம் : மீஸானுல் இஃதிதால், பாகம் : 3, பக்கம் : 263)

அம்ர் பின் ஷுஐப் என்பவர் நம்மிடம் பலவீனமானவராவார் என்ற யஹ்யா அல் கத்தான் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

(ஆதாரம் : மீஸானுல் இஃதிதால், பாகம் : 3, பக்கம் : 263, தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 8, பக்கம் : 43)

அம்ர் பின் ஷுஐப் இடம் அதிகமான மறுக்கப்பட வேண்டிய செய்திகள் இருக்கின்றன. நாம் அவர்களின் அறிவிப்பைப் பதிவு செய்வதெல்லாம் படிப்பினை பெறுவதற்குத் தான். ஆதாரத்திற்கு ஏற்பதாக இருந்தால் கூடாது என்று அஹ்மத் பின் ஹன்பல் கூறியதாக அப்துல் மலிக் அல் மைமூன் கூறுகிறார்.

(ஆதாரம் : மீஸானுல் இஃதிதால், பாகம் : 3, பக்கம் : 263)

இவருடைய ஹதீஸில் கோளாறு உள்ளது என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் கருதுகிறார்கள் என இப்னு உயையனா கூறுகிறார்.

(ஆதாரம் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 8, பக்கம் : 43)

அம்ர் பின் ஷுஐப் என்பவர் தம் தந்தை வழியில்லாமல் தாவூஸ், இப்னுல் முஸய்யப் வழியாகவும் நம்கமானவர்கள் வழியாகவும் அறிவித்தால் அதை ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்வது கூடும். அவர் தம் தந்தை, பாட்டானார் வழியாக அறிவித்தால் அதில் மறுக்கப்பட வேண்டிய அதிகமான செய்திகள் இடம் பெறுகின்றன. என்னிடத்தில் இதை ஆதாரமாகக் கொள்வது மதிப்பற்றது.

(ஆதாரம் : மஜ்ரூஹீன், பாகம் : 2, பக்கம் : 71)

அம்ர் பின் ஷுஐப் தம் தந்தை, பாட்டனார் வழியாக அறிவித்தவை (அவருடைய) ஏட்டிலிருந்து அறிவித்தவையாகும். அம்ர் பின் ஷுஐப் அவர் என் பாட்டனாரிடமிருந்து என் தந்தை கூறினார் என்று கூறுவார். இங்கிருந்து தான் பலவீனம் வருகிறது. மேலும் அம்ர் பின் ஷுஐப் என்பவர் ஸயீத் பின் முஸய்யப், அல்லது சுலைமான் பின் யஸார், அல்லது உர்வா வழியாக அறிவித்தால் அது நம்பகமானதாகும் என்றும் கூறினார்.

(ஆதாரம் : தாரீக் இப்னுமயீன் ரிவாயத் தவ்ரீ, பாகம் : 4, பக்கம் : 462)

ஹதீஸ் கலை அறிஞர்கள் அம்ர் பின் ஷுஐப், தம் தந்தை, பாட்டனார் வழியாக அறிவித்த செய்திகளை நாடும் போது ஆதாரமாகக் கொள்கிறார்கள். நாடும் போது விட்டு விடுகிறார்கள் என்று அஹமத் பின் ஹன்பல் அவர்கள் கூறினார்கள். (இவ்வாறு கூறுவதற்குக் காரணம்: அவர் விஷயத்தில் தடுமாற்றம் இருப்பதினால்)

ஆதாரம் : மீஸானுல் இஃதிதால், பாகம் : 3, பக்கம் : 263)

அம்ர் பின் ஷுஐப் அவர்கள் தம் தந்தை அவருடைய பாட்டனார் வழியாக அறிவிக்கும் செய்திகளைப் பற்றி பலர் விமர்சனம் செய்துள்ளதைப் பார்த்தோம். இதில் இப்னு மயீன், யஹ்யா பின் அல்கத்தான், அஹ்மத் பின் ஹன்பல் ஆகியோரின் கருத்து முரண்பட்டதாக இரு விதமான கருத்துக்கள் வந்துள்ளன. எனவே அதை நாம் எடுக்காமல் விட்டுவிடலாம்.

மீதமுள்ள விமர்சனங்களை நாம் பார்த்தால் சிலர் எந்தக் காரணமும் இல்லாமல் பலவீனமானவர்கள் என்று கூறியுள்ளார்கள். சிலர் காரணத்துடன் பலவீனத்தைக் குறிப்பிட்டுள்ளனர். எனவே காரணத்துடன் கூறியவர்களின் விமர்சனமே நாம் விவாதிக்க வேண்டியதாகும். காரணத்துடன் கூறிய அவர்களின் விமர்சனங்களைப் பின்வரும் நான்கு விஷயங்களில் உள்ளடக்கியுள்ளது.

1. அம்ர் அவர்களின் தந்தை ஷுஐப் அவர்கள், அவரின் பாட்டனார் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடம் எதையும் கேட்டதில்லை. எனவே இது தொடர்பு அறுந்த (முர்ஸல் வகை) செய்தியாகும்.

அதாவது ஷுஐப் அவர்களுக்கு மூன்று பாட்டனார்கள் இருந்துள்ளனர். 1. முஹம்மத் 2. அப்துல்லாஹ் (ரலி) 3. அம்ர் பின் அல்ஆஸ் (ரலி).

முதல் பாட்டனார் முஹம்மத் என்பவர் தாபியீ ஆவார், இரண்டாவது பாட்டனார் அப்துல்லாஹ் பின் அமர் (ரலி), மற்றும் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) ஆகியோர் நபித்தோழர்கள் ஆவார்கள்.

ஷுஐப் அவர்களின் தம் பாட்டனார் அவர்களிடமிருந்து அறிவிக்கிறார் என்று ஹதீஸில் வருவதால் அவருடைய மூன்று பாட்டனாரில் முதல் பாட்டனார் முஹம்தை (தாபியீ) என்று சில அறிஞர்கள் எடுத்துக் கொள்வதால் இந்த செய்தி முர்ஸல் (நபித்தோழர் விடுபட்ட தொடர்பு துண்டிக்கப்பட்ட) வகையைச் சார்ந்தது என்று கூறுகிறார்கள்.

பதில் : ஷுஐப் அவர்களின் அநாதையாக அவர்களின் பாட்டனார் அப்துல் லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் வளர்ந்து வந்தார்கள்.

(ஸியரு அஃலாமுன் நுபலா, பாகம்: 9, பக்கம் : 201)

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 63 வரை வாழ்ந்துள் ளார்கள். ஹிஜ்ரி 63, 65, 68, 72, 73, 77, 78 என்றும் கூறப்படுகிறது.

(தஹ்தீபுல் கமால், பாகம் : 15, பக்கம் : 362)

இவர்களிடம் இருந்த ஷுஐப் அவர்கள் அலீ (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்தில் அல்லது அதற்கு முன்னர் பிறந்துள்ளார்கள்.

(ஸியரு அஃலாமுன் நுபலா, பாகம் : 9, பக்கம் : 201)

அலீ (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வந்தது ஹிஜ்ரீ 35 ஆம் ஆண்டு.

(பத்ஹுல் பாரீ, பாகம் : 7, பக்கம் : 72)

ஷுஐப் அவர்கள், அலீ (ரலி) அவர்களின் ஆட்சிக்கு வந்த போது பிறந்திருந்தால் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களுடன் சுமார் 28 வருடங்கள் சேர்ந்திருந்துள்ளார்கள். 15 வருடம் சிறு வயது பருவம் என்று சொன்னாலும் மீதமுள்ள 13 வருடங்கள் ஏராளமான ஹதீஸ்களைக் கேட்டிருக்கலாம். அவர்களின் ஏடுகளையும் அவர்கள் காலத்தில் படித்திருக்கலாம் இதற்கு ஏரளாமான வாய்ப்புகள் இருந்துள்ளன.

எனவே ஷுஐப் அவர்கள் தம் பாட்டனார் என்று கூறியிருப்பது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களே என்று சொல்லலாம். வேறு சில நூல்களில் இந்த விவரம் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

ஸுனன் தாரகுத்னீ (4052), பைஹகீ (11851), ஹாகிம் (2186) தாரிகுஸ் ஸகீர் (2374) ஆகிய நூல்களில் ஷுஐப் அவர்களின் பாட்டனார் என்ற இடத்தில் தெளிவாக அப்துல்லாஹ் பின் அமர் (ரலி) அவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆய்வு செய்த தஹபீ அவர்கள் மொத்தம் பத்து ஹதீஸ்களில் (அவர் பாட்டனார் என்ற இடத்தில்) அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) என்று இடம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். மேலும் ஷுஐப் அவர்கள் தம் பாட்டனாருடன் இணைந்திருக்கிறார் என்பதையும் அவரிடம் அவர் செவியுற்று இருக்கிகிறார் என்பதையும் நான் அறிகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

(ஸியரு அஃலாமுன் நுபலா, பாகம்: 9, பக்கம் : 201)

ஷுஐப் என்பவர் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)யிடம் செவியுற்றுள்ளாரா? என்று இமாம் புகாரியிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் என்று கூறினார்கள்.

(ஸுனன் தாரகுத்னீ 3001)

எனவே ஷுஐபுடைய பாட்டனார் என்பது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) தான் என்பதும் அவரிடம் அவர்கள் செவியுற்றுள்ளார்கள் என்பதும் தெளிவாகிறது.

2. அம்ர் பின் ஷுஐப் தம் தந்தை, அவருடைய பாட்டனார் வழியாக அறிவிப்பதில் தான் மறுக்கப்பட வேண்டிய செய்திகள் இடம் பெற்றுள்ளன என்று சில அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

பதில் : இந்த விமர்சனத்திற்கு ஹதீஸ் கலை அறிஞர்களில் ஒருவரான அபூஸுர்ஆ அவர்கள் பின்வருமாறு பதிலளித்துள்ளார்கள்.

அமர் பின் ஷுஐபுடைய ஹதீஸ்களை மறுப்பதெல்லாம், அவர் தம் தந்தை, அவருடைய பாட்டனார் மூலம் அதிகமான செய்திகளை அறிவிப்பதால் தான், மேலும் அவர் நேரடியாகக் கேட்டவைகள் குறைவானதாகும். அவரிடமிருந்த ஏட்டிலிருந்து தான் அதிகமானவற்றை அறிவித்துள்ளார் என்று கூறுகின்றனர். ஆனால் அல் முஸன்னா பின் ஸபாஹ், இப்னு லஹீஆ மற்றும் பலவீனமானவர்கள், இவரிடமிருந்து அறிவிப்பதில்ப் தான் மறுக்கப்பட வேண்டிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.

(தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 8, பக்கம் : 43)

மறுக்கப்பட வேண்டிய செய்திகள் பலவீனமான அறிவிப்பாளர்கள் தான் அம்ர் பின் ஷுஐப் அவர்கள் மூலம் அறிவித்துள்ளார்களே தவிர அம்ர் பின் ஷுஐப், தம் தந்தை, அவருடைய பாட்டனார் மூலம் இடம் பெறவில்லை. எனவே இந்த விமர்சனமும் சரியில்லை.

3. அம்ர் பின் ஷுஐப் தம் தந்தை அவர் பாட்டனார் வழியாக அறிவிப்பது சரியில்லை என்பதினால் தான் இந்த வகையில் இடம் பெறும் செய்திகளைத் தமது ஆதாரப்பூர்மான தொகுப்புகளில் இமாம்கள் இடம் பெறச் செய்யவில்லை என்று இமாம் இப்னு அதீ அவர்கள் கூறியுள்ளார்.

இந்த வாதமும் சரியில்லை ஆதாரப்பூர்வமான தொகுப்புகள் என்று சொல்லப்படும் புகாரி, முஸ்லிம் போன்ற நூல்களில் இடம்பெறாத எத்தனையோ ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் வேறு நூல்களில் இடம்பெற்றுள்ளன. எனவே ஆதாரப்பூர்வமான நபிமொழி தொகுப்புகள் என்று சொல்லப் படும் நூல்களில் இருந்தால் மட்டும் தான் அந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது என்று அறிஞர்களும் கூறவில்லை. மேலும் இமாம் இப்னு ஹுஸைமா அவர்கள் தமது ஸஹீஹ் (ஸஹீஹ் இப்னு ஹுஸைமா என்று கூறப்படும்) நூலில் அம்ர் பின் ஷுஐப். தம் தந்தை, அவருடைய பாட்டனார் வழியாக அறிவித்த செய்திகளைப் பல இடங்களில் பதிவு செய்துள்ளார்கள். மேலும் இமாம் புகாரி அல்கிராஅத்து கல்ஃபல் இமாம் (இமாமுக்குப் பின்னால் ஓதுதல்) என்ற நூலில் இவரின் செய்தியை ஆதராமாகப் பதிவு செய்துள்ளார்கள்.

அம்ர் பின் ஷுஐப் அவர்களின் செய்திகள், திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், தாரிமி ஆகிய நூல்களில் மட்டும் சுமார் 499 இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

4. ஷுஐப் அவர்கள் தம் பாட்டனார் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடமிருந்து எதையும் செவியுற்றதில்லை. அவர் அறிவிப்பதெல்லாம் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களின் ஏட்டிலிருந்து தான் எனவே இவரின் செய்திகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

பதில் : முதலாவது விமர்சனத்திலேயே ஷுஐப் அவர்கள் தம் பாட்டனார் அப்துல்லாஹ் பின் அமர் (ரலி) அவர்களிடம் செவியுற்றுள்ளார்கள் என்று தெளிவுபடுத்தியுள்ளோம். எனவே செவியுறவில்லை என்ற விமர்சனம் சரியில்லை. மேலும் அவரிடமிருந்த ஏட்டிலிருந்து தான் அவர் அறிவிக்கிறார் என்ற விமர்சனத்திற்குரிய பதிலைப் பார்ப்போம்.

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபிமொழிகளை எழுதிக் கொண்டவரில் மிக முக்கியமானவர்.

நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் எவரும் என்னை விட அதிகமான நபிமொழிகளை அறிவிக்கவில்லை. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் இருந்த (அதிகமான) நபிமொழிகளைத் தவிர. ஏனெனில், அவர்கள் (ஹதீஸ்களை) எழுதி வைத்துக் கொள்வார்கள். நான் (நினைவில் வைத்துக் கொள்வேனே தவிர) எழுதி வைத்துக் கொண்டதில்லை.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),நூல் :புகாரி 113

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் ஹதீஸ்களை எழுதி வைத்திருந்தார்கள் என்பதற்கு இது தெளிவான சான்றாகும்.

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் சுமார் 28 வருடங்கள் ஷுஐப் அவர்கள் இருந்துள்ளதால் அவர்களின் ஏட்டிலிருந்தும் அறிவிக்கலாம். தவறேதும் இல்லை.

ஏட்டிலிருந்து அறிவிப்பது சரியல்ல என்று சிலர் விமர்சனம் செய்துள்ளார்கள். அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் நபிமொழிகளை ஏட்டில் எழுதி வைத்திருந்தார்கள் என்பது நிரூபணமானால் அவர்களின் ஏட்டிலிருந்து நபி மொழிகளை ஒருவர் அறிவிப்பது செவியேற்று அறிவிப்பதை விட வலிமை வாய்ந்தது தான். ஏனெனில் நினைவில் வைப்பதை விட எழுத்தில் உள்ளதில் தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.

எனவே ஷுஐப் அவர்கள் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களின் ஏட்டிலிருந்து அறிவித்தார்கள் என்று சொன்னால் அந்தச் செய்தி வலிமை பெறுமே தவிர பலவீனமடையாது.

எனவே ஷுஐப் அவர்கள் தம் பாட்டனார் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் நேரடியாக நபிமொழிகளைச் செவியுற்றுள்ளார் என்பதற்குச் சான்றுகள் இருப்பதாலும் அவர்கள் ஏட்டிலிருந்து அறிவித்தாலும் அது வலிமையானது தான் என்பதாலும் பெருநாள் தொழுகைளின் கூடுதல் தக்பீர் தொடர்பாக வந்துள்ள 7+5 தக்பீர்கள் தொடர்பான நபிமொழி ஆதாரப்பூர்வமானதே!

ஆன்லைன்பி.ஜே.காம்

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top