இறைவனுக்கு உருவம் உண்டா?

Posted by Kodikkalpalayam on Wednesday, April 27, 2011 0


அகில உலகங்களையும், அண்ட சராசரங்களையும் படைத்துப் பரிபாலிக்க கூடிய அருளாளன் அல்லாஹ்வை எவ்வாறு நம்ப வேண்டுமென அல்லாஹ்வும், அவனது அருமைத் தூதர் (ஸல்) அவர்களும் நமக்கு கற்றுத் தந்தார்களோ அவ்வாறு நம்பாத வரை நமது இறை நம்பிக்கை பரிபூரணமடையாது. அந்த வகையில் அகிலத்தின் இரட்சகன் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா? இல்லையா? என்பதில் நமது சமுதாய மக்களில் ஒரு சாரார் தொடர்ந்தும் தெளிவற்றவர்களாகவே இருந்து வருகின்றனர்.


இவற்றைத் தெளிவுபடுத்த வேண்டிய மார்க்க அறிஞர்களோ ‘ஸுன்னாக்களை சில்லறைகள்’ என சிறுபிள்ளைத்தனமாக விமர்சிப்பதற்கும், சத்திய இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் கூட்டல், குறைத்தல் செய்யாது எடுத்துரைப்பவர்களை சமூக ஒற்றுமைக்கு(?) எதிரானவர்களாக சித்தரிப்பதற்கும் மிம்பர் மேடைகளைப் பயன்படுத்தி பாழ்படுத்துகின்றனர்.

எனவே, சத்திய மார்க்கத்தின் தூய மூலாதாரங்களான அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளின் ஒளியில் அருளாளன் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா? இல்லையா? என்பது பற்றி நோக்குவோம்.

"அர்ஷின் மீது அவன்(அல்லாஹ்) வீற்றிருக்கிறான்." (திருக்குர்ஆன் 7:54, 10:3, 13:2, 20:5, 25:59, 32:4, 57:4)

"அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும். தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்.
(அல் குர்ஆன் 75 : 22)

வானவர்கள் அணியணியாய் நிற்க உமது இறைவன் வருவான்."(திருக்குர்ஆன் 89:22)

பூமியாகிய அதன் மேலுள்ள யாவும் அழிந்து போகக்கூடியதாகும். கண்ணியமும், சங்கையும் உடைய உமது இரட்சகனின் (சங்கையான) முக(ம் மட்டு)மே (அழியாது) நிலைத்திருக்கும்’ என்று குர்ஆன் (55 : 26, 27) கூறுகிறது.
(இன்னும் பார்க்க 2:15, 2:272 13:22, 30:38, 39, 76:9, 92:20, 6:52, 18:28, 28:88)

மேற்கண்ட வசனங்களிலிருந்து தெளிவாக இறைவனுக்கு உருவம் உண்டு என்பதை நாம் அறியலாம்.

இது தவிர, அல்லாஹ்வுக்கு முகம் உண்டு. விரல்களும், கைகளும் கால்களும் உண்டு. அல்லாஹ் பார்க்கின்றான், பேசுகின்றான், செவியுருகின்றான், சிரிக்கின்றான், கோபிக்கின்றான் போன்ற இறைப்பண்புகளை விவரிக்கும் ஏராளமான நபிமொழிகள் காணக்கிடைக்கின்றன. அவற்றை எல்லாம் உள்ளது உள்ளபடி ஏற்றுக் கொள்ளவேண்டுமே தவிர அதற்கு உவமைகள் கூறக்கூடாது. உதாரணங்கள் கூறக்கூடாது. எவருக்கும் நிகரில்லாத எப்பொருளைப் போலும் இல்லாமலும் இருக்கின்றான். அவன் தன்மைகளை உருவகப்படுத்தியோ, கூட்டியோ, குறைத்தோ, மாற்றியோ, மனித கற்பனைக்கு ஏற்ப பொருள் கொள்ளக்கூடாது. மனித கற்பனைக்கு அப்பாற்பட்டவனாக ஏக இறைவன் இருக்கிறான்.


இதனை விளங்குவதற்குப் படைத்தவன், படைப்பினம் என்ற இரு வார்த்தைகளின் முழு சக்தியையும் புரிந்து கொண்டால் விளங்கிக் கொள்ள முடியும்.

உதாரணத்திற்கு.. ஒரு மனித ரோபோவை எடுத்துக் கொள்வோம். அதனை உருவாக்கியவர் அது எப்படி செயல்பட வேண்டும் என அவர் வடிவமைத்தாரோ அதனை விடுத்து அதற்கு உபரியாக அதனால் ஒன்றும் செய்ய இயலாது.

தெளிவாக கூற வேண்டுமெனில் படைத்தவனை மிஞ்சி படைப்பினத்திற்கு ஒன்றும் செய்ய இயலாது. இந்த உலகமெலாம் கண்காணிக்கும் சக்தியுள்ள இறைவனின் ஞானத்தில் மிகச் சிறிய அளவே மனிதன் பெற்றுள்ளான். நமக்கு தரப்பட்ட இச்சிறிய அறிவினைக் கொண்டு நம்மைப் படைத்தவன் எப்படியிருப்பான் என ஒரு தீர்மானத்திற்கு வருவது இயலாத காரியம்.

ஆக, அல்லாஹுடைய முகம், கைகள், கால்கள் எல்லாம் எவ்வாறு இருக்கும் என்றுநாமாக கற்பனை செய்து வடிவம் கொடுப்பதற்கும், அல்லாஹ் எவ்வாறு இருப்பான் என்று சிறு பிள்ளைத்தனமாக அதைப்பற்றி கேள்வி கேட்பதற்கும் யாருக்கும் அனுமதில்லை. அதைப்பற்றி விளங்க மனிதனுக்கு எந்த அறிவுமில்லை.

“உமக்கு எது பற்றி அறிவு இல்லையோ, அதை நீர் பின்பற்ற வேண்டாம்! நிச்சயமாகச் செவிப் புலன், பார்வை, இதயம் ஆகிய இவை ஒவ்வொன்றும் விசாரிக்கப்படக்கூடியனவாக இருக்கின்றன.” (17:36)

அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.
(அல் குர்ஆன் 42 : 11.)

‘அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன், நன்கறிந்தவன்’ (அல்குர்ஆன் 06:103)

‘அல்லாஹ் ஒருவன்’ என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. (அல்குர்ஆன் 112:01-04)

அல்லாஹுவை யாரும் உலகில் பார்த்தார்களா....? நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் இரவின் போது இறைவனைப் பார்த்தார்களா?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிஃராஜின் போது அல்லாஹுவைப் பார்த்ததாகவே இஸ்லாமிய சமுதாய மக்களில் பலர் நம்பியுள்ளனர். இதன் உண்மை நிலை தொடர்பாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றார்கள்.

‘நான் (அன்னை) ஆயிஷா (ரழி) அவர்களிடம் சாய்ந்து அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்) அபூ ஆயிஷா, ‘மூன்று விஷயங்கள் உள்ளன. அவற்றில் எந்த ஒன்றை யார் கூறினாலும் அவர் அல்லாஹ்வின் மீது மிகப் பெரும் பொய்யை இட்டுக்கட்டியவர் ஆவார்’ என்று கூறினார்கள். நான், ‘அவை எவை? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘யார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று கூறுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டி விட்டார்’ என்று சொன்னார்கள்.

உடனே சாய்ந்து அமர்ந்து (ஓய்வு எடுத்துக்) கொண்டிருந்த நான் எழுந்து (நேராக) அமர்ந்து, ‘இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! நிதானித்துக் கூறுங்கள்! அவசரப்படாதீர்கள். வலிவும் மாண்புமிக்க அல்லாஹ், ‘அவரை தெளிவான அடிவானத்தில் பார்த்தார்’ (அல்குர்ஆன் 81:23)என்றும், ‘ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார்’ (அல்குர்ஆன் 53:13) என்றும் கூறவில்லையா?’ என்று கேட்டேன்.

அதற்கு ஆயிஷா (ரழி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள். இந்த சமுதாயத்தாரில் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘அது, (வானவர்) ஜிப்ரீலை (நான் பார்த்ததை)யே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை, அவர் படைக்கப் பெற்றுள்ள (நிஜத்) தோற்றத்தில் இந்த இரு தடவைகள் தவிர வேறெப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து (பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக்கொண்டிருந்தது. என்று கூறினார்கள்.


மேலும், ஆயிஷா (ரழி) அவர்கள் (தமது கருத்துக்குச் சான்றாக) அல்லாஹ் (பின்வருமாறு) கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? என்று கேட்டார்கள். ‘அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.’ (அல்குர்ஆன் 6:103)

அல்லது (பின்வருமாறு) அல்லாஹ் கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? ‘எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும், வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அழ்ழாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 42:51)


(தொடர்ந்து) ஆயிஷா (ரழி) அவர்கள் மீதமுள்ள இரண்டு விஷயங்களையும் கூர்ரிநார்கல்.’ (அறிவிப்பவர்: மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-287)

‘நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘அவன் ஒளியாயிற்றே நான் எப்படி பார்க்க முடியும்?’ என்று கேட்டார்கள்.’ (அறிவிப்பவர்: அபூதர்(ரழி), நூல்:ஸஹீஹ் முஸ்லிம்-291)

மேலுள்ள நபிமொழிகள் மூலம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்வைப் பார்க்கவில்லை. மாறாக, இவ்வுலகில் பார்க்கவும் முடியாது என்பதை தெளிவுபடுத்துகின்றது.

நபி மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்களா?

நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது ‘என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்’ எனக் கூறினார். அதற்கு (இறைவன்) ‘என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம்’ என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது, ‘நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்’ எனக் கூறினார். (அல்குர்ஆன் 07:143)

மேலுள்ள அருள்மறை வசனத்தில் அல்லாஹ் மூஸா (அலை) அவர்களைப் பார்த்து, ‘என்னை நீர் பார்க்கவே முடியாது’ என்று கூறுவதன் மூலம் நபி மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வைப் பார்க்கவில்லை என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் பல மறுமையில், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்ற அவனுடைய நல்லாடியார்களுக்கு அல்லாஹ் காட்சி தருவான் என்று கூறுகிறது.


இறைத்தூதர் அவர்களே! கியாமத் நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண முடியுமா? என்று சிலர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘மேகம் மறைக்காத முழு நிலவைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?’ என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! இல்லை’ என்றார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், ‘மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கும் நபித்தோழர்கள் ‘இல்லை’ என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘இதே போல்தான் நீங்கள் உங்களின் இறைவனைக் காண்பீர்கள்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

சுவனத்தில் இறைவனைக் காணும் பாக்கியம்

நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: சுவனத்தில் சென்றதும் ஓர் அறிவிப்பாளர் கூறுவார்: சுவனவாசிகளே! நிச்சயமாக! அல்லாஹ்விடத்தில் உங்களுக்கென ஒரு வாக்குறுதி உள்ளது. அதனை உங்களுக்கு நிறைவேற்றித் தர அல்லாஹ் விரும்புகிறான் -அதற்கு அவர்கள் சொல்வார்கள்: என்ன அது? அவன் எங்களின் எடைத்தட்டுகளைக் கனப்படுத்தவில்லையா? மேலும் எங்கள் முகங்களை வெண்மையாக்கவில்லையா? மேலும் அவன் எங்களைச் சுவனத்தில் பிரவேசிக்கச் செய்து, நரகத்தை விட்டும் எங்களைத் தூரமாக்கவில்லையா? நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: அப்போது அவர்களுக்குத் திரை விலக்கப்படும். இறைவனை அவர்கள் காண்பார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வைப் பார்க்கும் பாக்கியத்தை விடவும் அதிக விருப்பமான அதிகக் கண்குளிர்ச்சியான எதையும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியிருக்கமாட்டான்!, (நூல்: முஸ்லிம்)


எனவே, அருள்மறை வசனங்களும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான நபிமொழிகளும் போதிக்கும் அடிப்படையில் அகிலத்தின் இரட்சகன் அல்லாஹ்வுக்கு தன்னிகரில்லா, தனி உருவம் உண்டு எனவும், அகிலத்தின் இரட்சகனை இவ்வுலகில் ஒருபோதும் பார்க்கவே முடியாது எனவும், மறுமையில் அவனை சுவர்க்கவாசிகள் பார்ப்பார்கள் எனவும், நம்புவதுடன் அல்லாஹ்வின் பண்புகளை, படைப்புக்களின் பண்புகளுக்கு நிகராக்கி வைத்து, நாமாக அல்லாஹுக்கு உருவம் கற்பித்து, வலிந்துரை செய்யாது நம்புதல் வேண்டும்.

இதை விட்டுட்டு விதண்டா வாதம் செய்வதன் மூலம் வழிகேட்டில் செல்வதை தவிர்ப்போமாக!

இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;, இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (2:2)


(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (2:3)


(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும்; உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். (2:4)


இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (2:5)


யா அல்லாஹ்! மறுமையில் உன் முகத்தைக் காண்பதன் இன்பத்தையும் உனது சந்திப்பின் ஆர்வத்தையும் எங்களுக்கு வழங்குவாயாக!

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top